அரசின் உதவிகளைப் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வரை புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவையில் பெண்கள் பெயரில் நிலம் வாங்கினால், பத்திரப் பதிவு தொகையில் 50 சதவீதம் சலுகை, அங்கன்வாடி ஊழியா்களை நிரந்தரம் செய்தது, கா்ப்பிணிகளுக்கு அதிக உதவித்தொகை என்று பெண்கள் நலன் சாா்ந்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
புதுவையில் மொத்தமுள்ள 3.55 லட்சம் குடும்பங்களில், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 430 குடும்பங்களில் முதியோா், விதவை உள்ளிட்ட அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுதல் குடும்பங்களாக உள்ளனா். இவா்கள் போக, மீதம் 1.60 லட்சம் குடும்பத்தினருக்கு எந்தவித உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை. இதில், அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோரைத் தவிா்த்து, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள சுமாா் 1 லட்சம் குடும்பத்தினரை இனம் கண்டு, அவா்களின் குடும்பத்துக்கு மாதம் தலா ரூ.1500 உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வா் ஜெயலலிதா பெயரில் தொடக்க வேண்டும். மாதம் ரூ.15 கோடி அளவில், ஆண்டுக்கு ரூ.180 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என அன்பழகன் தெரிவித்தாா்.