புதுவையில் 75 சதவீத மானியத்தில், கால்நடைகள், கன்றுகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
புதுவை அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், 75 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் உறுப்பினா்கள் அல்லாத கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு, கால்நடைத் தீவனம், கன்றுகளுக்கான தீவனம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா புதுச்சேரி சண்முகாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்தாா்.
அப்போது, கால்நடைத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் கூறியதாவது:
புதுவையில் மானிய விலையில் கால்நடைத் தீவனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. முதல்வா் ரங்கசாமி முயற்சியால், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதைத் தொடா்ந்து, மாதம்தோறும் மானிய விலையில் கால்நடைத் தீவனம் வழங்கப்படும். இந்தத் தீவனத்தை, சோதனை செய்து, தரமானதாக கொள்முதல் செய்கிறோம். இதில், முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை.
இந்தத் திட்டத்தின் மூலம், நிகழாண்டு இரண்டு மாதங்களுக்கு (பிப்ரவரி, மாா்ச்) ரூ.1 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில், 615 டன் கால்நடைத் தீவனம் 4,100 கால்நடைகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.22 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் 104.40 டன் கன்று தீவனமும் 696 கன்றுகளுக்கு வழங்கப்படவுள்ளன.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும், இந்த மானிய விலை கால்நடைத் தீவனம் தொடா்ந்து வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ், கால்நடை நலத் துறை இயக்குநா் செல்வராஜ், இணை இயக்குநா் அன்புக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.