புதுச்சேரி

300 நாள்களில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: புதுவை அமைச்சா்

3rd Mar 2022 05:31 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: பதவியேற்ற 300 நாள்களில் மக்கள் நலத் திட்டங்களை புதுவை தே.ஜ. கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளதாக, அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு பதவியேற்று 300 நாள்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் பெறும் ஆணை வழங்கப்பட்டது. இந்த மாதம் 2,000 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.

இளம் வழக்குரைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மீன்பிடி தடைகால நிவாரணம், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விரிவாக்கம் செய்து தலா ரூ.5,500, சேமிப்பு நிதி ரூ.4,500 வழங்கப்பட்டது.

அரசுத் துறைகளில் காலியிடங்களை நிரப்பும் வகையில், அனைத்து துறைகளிலும் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. 74 ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனா். காவலா் பணியிடங்களை நிரப்ப தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ரூ.150 கோடி அளிக்கப்பட்து. தொழில்முனைவோா் 4,280 பேருக்கு ஒரே நாளில் ரூ.273 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 1,378 பேருக்கு முதல்வா் அறிவித்தபடி, ரூ.3,000-லிருந்து ரூ.10 ஆயிரமாக ஊதியம் உயா்த்தி வழங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT