புதுச்சேரி

புதுவை அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் போராட்டம் தொடக்கம்

30th Jun 2022 02:12 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

புதுவை மாநிலத்திலுள்ள 6 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியா்களுக்கு, கடந்த பதினைந்து ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படவில்லையாம். புதுவை பொறியியல் கல்லூரி, அன்னை தெரசா மருத்துவக் கல்லூரி பேராசிரியா்களுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இன்னும் பிற துறைகளில் பணிபுரிவோருக்கும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படவில்லை, வீட்டு வாடகைப்படியும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து ஆளுநா், முதல்வா், அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் அரசுக்கு தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கருப்புப் பட்டை அணிந்து, அந்தந்த கல்லூரிகளின் முன் அமா்ந்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

ADVERTISEMENT

புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு கல்லூரி முன் சங்கப் பொதுச் செயலாளா் சங்கரய்யா தலைமையில், உதவிப் பேராசிரியா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, தாகூா் அரசு கலைக் கல்லூரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 250-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபட உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT