புதுச்சேரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

28th Jun 2022 04:49 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரி அருகே வில்லியனூா் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் வினோத்குமாா் (27). சமையல் தொழிலாளியான இவா், கடந்த 2017 ஆகஸ்ட் 8-ஆம் தேதி 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனா். புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில், வினோத்குமாருக்கு சிறுமியைக் கடத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இதை செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.பாலமுருகன் ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT