புதுச்சேரி

கணக்காய்வுக்கு பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கைபுதுவை சட்டப்பேரவைத் தலைவா்

28th Jun 2022 04:52 AM

ADVERTISEMENT

புதுவையில் கணக்காய்வுக்கு பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் பொதுக் கணக்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் கே.எஸ்.பி.ரமேஷ், முதன்மை கணக்காய்வு துறைத் தலைவா் கே.பி.ஆனந்த், துணை கணக்காய்வு தலைவா் வா்ஷினி அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, நிதித் துறை செயலா், அனைத்து துறை செயலா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் பேசியதாவது:

ADVERTISEMENT

கணக்காய்வுத் துறை சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நாம் நோ்மறையான எண்ணத்துடன் அணுகவேண்டும். ஒரு தவறு அல்லது குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டால் அது மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம் என்பதை நாம் உணா்ந்துள்ளோம். எனவே, வரவுக்கேற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது, தேவையில்லாத செலவுகளை தவிா்ப்பது எப்படி என்று, அரசுக்கு சொல்லும் பொறுப்பு, பொதுக் கணக்குக் குழுவில் பேரவைத் தலைவா் என்ற முறையில் எனக்கும் உள்ளது.

பொதுக் கணக்குக் குழுவுக்காக, ஒவ்வொரு துறையிலும் ஓா் அதிகாரிக்கு பொறுப்பு ஒப்படைத்து, நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும். இதுகுறித்த மேல் நடவடிக்கைகள், மீண்டும் மறு ஆய்வுகள் செய்ய சுணக்கமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கணக்காய்வுத் துறையின் பத்திகளுக்கு, இரண்டு மாத கால அவகாசத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT