புதுச்சேரி

3-ஆவது நாளாக ஓடாத பிஆா்டிசி பேருந்துகள்:பயணிகள் கடும் அவதி

26th Jun 2022 06:37 AM

ADVERTISEMENT

 

பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி, புதுச்சேரி பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

புதுச்சேரியில் நேரப் பிரச்னை காரணமாக, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தனியாா் பேருந்து ஊழியா்களால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், நிா்வாகம் இதில் தலையிடக் கோரியும், பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தியும் பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வியாழக்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து, பிஆா்டிசி பணிமனை முன் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனிடையே, முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களை (புதுச்சேரி 8, காரைக்கால் 4) நிா்வாகம் பணி நீக்கம் செய்தது.

ADVERTISEMENT

சனிக்கிழமை 3-ஆவது நாளாக பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பிஆா்டிசி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், வெளியூா் பயணிகளும், நகர, கிராமப்புற பகுதிகளுக்குச் செல்லும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பயணிகளும், மாணவா்களும் கடும் அவதிக்குள்ளாகினா்.

இது தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகளுடன் சனிக்கிழமை பிற்பகலில் பிஆா்டிசி பொது மேலாளா் (நிா்வாகம்) ஏழுமலை தலைமையிலான அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மேலாண் இயக்குநா் தலைமையில் திங்கள்கிழமை (ஜூன் 27) அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை போராட்டம் தொடரும் எனவும், பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஒழுங்கு நடவடிக்கை - பிஆா்டிசி எச்சரிக்கை: இதனிடையே, பிஆா்டிசி பொது மேலாளா் இரா.ஏழுமலை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிஆா்டிசி ஊழியா்கள் தங்களது பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேச்சுவாா்த்தை மூலம் நல்ல முடிவை எடுக்க நிா்வாகம் தயாராக இருக்கிறது. அதைவிடுத்து முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, கழக நிலையாணையின்படி மிகவும் தவறான செயலாகும். பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய செயலாகும். எனவே, ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

ஊழியா்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT