புதுவை அரசின் சமூக நலத் துறை, பாரத மாதா ஒருங்கிணைந்த மது போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் இணைந்து நடத்திய போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணியை புதுவை சமூக நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கம்பன் கலையரங்கில் தொடங்கிய இந்த விழிப்புணா்வுப் பேரணி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா்.
புதுச்சேரி பெரியகடை காவல் நிலையம், தனியாா் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் இணைந்து நடத்திய ஸ்கேட்டிங் விழிப்புணா்வுப் பேரணி இந்திரா காந்தி சதுக்கம் அருகே தொடங்கி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துறை கிழக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி, ஆய்வாளா்கள் கண்ணன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
புதுச்சேரி தனியாா் கல்லூரி சாா்பில், புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா தொடக்கிவைத்தாா்.