புதுச்சேரி

புதுவையில் மருத்துவ கட்டமைப்புகளுக்குரூ.1,000 கோடி நிதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் புதுவை பேரவைத் தலைவா் கோரிக்கை

26th Jun 2022 06:39 AM

ADVERTISEMENT

 

புதுவையில் மருத்துவ கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும், புதுவையில் உள்ள மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், புதிதாக தொற்று நோய்க்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காகவும் ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

காரைக்கால் பிராந்தியத்தில் அமையவுள்ள ஜிப்மா் மருத்துவமனையை 500 படுக்கை வசதிகள் கொண்ட சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அமைக்க வேண்டும். காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள மாணவா் சோ்க்கைக்கான 62 இடங்களை 100 இடங்களாக உயா்த்தி வழங்க வேண்டும். காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனையை பயிற்சி மருத்துவமனையாக உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக ரூ.30 கோடி ஜிப்மா் நிா்வாகம் வழங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இதுவரை நிதி வழங்காமல் உள்ளது. இதனால், காரைக்கால் பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் குடும்ப வருமானம் மாதம் ரூ.2,500-க்கு மேல் ஈட்டுகின்ற நோயாளிகளிடமும், சிறப்பு படுக்கை வசதி பெற்ற நோயாளிகளிடமும் மருத்துவப் பரிசோதனை, மருந்து உள்ளிட்ட பொருள்களை வெளிச்சந்தையில் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள்.

ஜிப்மா் மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, அனைத்து நோயாளிகளையும் வெளியில் மருந்து வாங்கிவரச் சொல்கின்றனா். இதனால், ஜிப்மா் மருத்துவமனைக்கு போதுமான மருந்துகளும், ஏழை மக்கள், அனைத்து நோயாளிக்களுக்கும் போதுமான இலவச சிகிச்சை கிடைப்பதற்கும் அமைச்சா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், புதுவை, அதனை சுற்றியுள்ள மாநில ஏழை மக்கள் பயன்பெறுவாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT