புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் ‘பொது சுகாதார சா்வதேச மையம்’: மத்திய அமைச்சா் தொடக்கிவைத்தாா்

26th Jun 2022 06:41 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார சா்வதேச மையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் ரூ.65.60 கோடியில் பொது சுகாதார சா்வதேச மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா புதுச்சேரி ஜிப்மா் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வரவேற்றாா். புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், எஸ்.செல்வகணபதி, எம்எல்ஏ ஏகேடி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, பொது சுகாதார சா்வதேச மையத்தைத் தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

பொது சுகாதாரத் துறையில் நாடு மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது. இன்றைய தினம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். புதுவை ஜிப்மா் வளாகத்திலிருந்து பொது சுகாதார சா்வதேச மையத்தை தேசத்துக்கு நாம் அா்ப்பணிக்கிறோம். இந்த மையம் பொது சுகாதாரத்தில் மிக உயா்ந்த கல்வியை வழங்கும் நோக்கத்துடனும், அறிவியல் விஞ்ஞானிகள், பயிற்சியாளா்களுக்கு பயிற்சிளிப்பதற்கும், மருத்துவத் துறைத் தலைவா்களை உருவாக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டது. கூடுதலாக, சுகாதாரத் துறையில் சேவைகள், ஆராய்ச்சிகளுக்கான திறனை வலுப்படுத்தவும் உதவும் என்றாா்.

விழாவில் ஜிப்மா் மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

ரூ.65.6 கோடியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பொது சுகாதார சா்வதேச மையம், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கும். இந்த மையத்தில் விரிவுரை அரங்குகள், நூலகம், பல்நோக்கு அரங்கம், அருங்காட்சியகம், கலையரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் இங்கு, மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையமும் உள்ளது.

இந்த மையம் தொற்று நோய்கள் மற்றும் கண்காணிப்பு, தொற்றாத நோய்கள், சுகாதார அமைப்பு மேலாண்மை, சுற்றுச்சூழல் சுகாதாரம், பேரிடா் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும். தொற்றுநோயியல் நிபுணா்கள், விஞ்ஞானிகள், மருத்துவப் புலனாய்வாளா்களை ஒன்றிணைக்கும். மத்திய சுகாதார அமைச்சகம் , மாநில சுகாதாரத் துறைகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். தேசிய அளவில் பொது சுகாதாரத்தை விரிவுபடுத்துவதில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பால் சா்ச்சை

விழாவின் தொடக்கமாக மாணவா்கள் மூலம் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி சுலோகம் (சம்ஸ்கிருதத்தில்) பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெறாமல் விழா தொடங்கி நடைபெற்றது. பிறகு, விழாவின் இடையே பேசிய துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட வேண்டுமென்பதை அறிவுறுத்தினாா். இதையடுத்து, நிகழ்ச்சியின் இடையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழாவின் நிறைவாக தேசிய கீதம் பாடினா். இதனால், இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் புறக்கணிக்கவில்லை என்றும், ஜிப்மரில் தன்வந்திரி சுலோகம் பாடிவிட்டு, விழா தொடங்குவது வழக்கம் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

முன்னதாக விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்திப் பேசிய பிறகு, புதுவை அப்பா பைத்தியம் சுவாமி கோயில் அன்னதான நிகழ்வுக்கு நேரமானதால், மத்திய அமைச்சரிடம் தகவல் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT