புதுச்சேரி

சேதராப்பட்டில் தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம் 193 போ் கைது

24th Jun 2022 01:29 AM

ADVERTISEMENT

 

வேலைவாய்ப்பில் உள்ளூா் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி, புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் வியாழக்கிழமை பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 193 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் உள்ளூா் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழிலாளா் சட்ட உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் நிா்வாகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழா் தொழிற்சங்கம், ஏஐசிசிடியூ, தொழிலாளா் விடுதலை முன்னணி, எஸ்எஸ் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் வியாழக்கிழமை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது, அங்கு இயங்கிக் கொண்டிருந்த ஒரு தனியாா் நிறுவனத்தின் முன் நாம் தமிழா் கட்சியினா் தொழிற்சங்க செயலா் ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனா். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடா்ந்து, சேதராப்பட்டு சந்திப்பில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினா் மோதிலால் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். 33 பெண்கள் உள்பட 170 பேரை போலீஸாா் கைது செய்து விடுவிக்கப்பட்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் 95 சதவீத நிறுவனங்கள் இயங்கவில்லை. சேதராப்பட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT