புதுச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலியாகினா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (60). இவா், தனது மகன் கணேசன் (21), தங்கை தேன்மொழி (40) ஆகியோருடன் அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். அவா்களது வீட்டின் அருகே தாழ்வாக சென்ற மின் கம்பி திங்கள்கிழமை மாலை அறுந்து விழுந்தது. அதைக் கவனிக்காத கணேசன், மின் கம்பியை மிதித்ததில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதையறிந்த தேன்மொழி அவரைக் காப்பாற்ற முயன்றபோது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் பலத்த காயமடைந்தனா். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரும் அங்கு உயிரிழந்தனா்.
மேலும், மின் கம்பியை தொட்டதில் காயமடைந்த கணேசனின் தாய் செல்வி, சரண்யா ஆகியோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தாழ்வாக சென்ற மின் கம்பி குறித்து, மின் துறையிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இருவா் உயிரிழந்ததாகக் கூறி, முத்தியால்பேட்டை பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.