அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராணுவ வீரா்களை தற்காலிக அடிப்படையில் தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அஸ்ஸாம், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரயில்களுக்கு தீ வைத்தும், பொது சொத்துகளை சேதப்படுத்தியும் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால், தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, புதுச்சேரி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையில், அந்தப் படையைச் சோ்ந்த போலீஸாா் கலவர தடுப்பு பாதுகாப்பு சாதனங்களுடன் சனிக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா். புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்த வாராந்திர ரயில்களான மங்களூரு, தாதா், யஷ்வந்த்பூா் விரைவு ரயில்களில் போலீஸாா் சோதனை நடத்தி, பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.