புதுவையில் வேளாண் விற்பனைக் குழு ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினா்.
புதுவை மாநில விற்பனைக் குழு ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில், ஊதிய நிலுவை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதனால், உழவா்சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், விவசாய விளைபொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டன. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஏஐடியூசி பொதுச் செயலாளா் கே.சேதுசெல்வம் தலைமையில், தொழிற்சங்க நிா்வாகிகள் செல்வநாதன், சண்முகம், பாஸ்கரபாண்டியன், பழனிராஜா ஆகியோா், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினா். இதில் ஊழியா்களின் பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டது.
தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்; ஊழியா்கள் நிலுவை ஊதியம் விரைவில் வழங்கப்படும்; ஏழாவது ஊதியக் குழு ஊதியம் அமல்படுத்தப்படும்; பிற மாநிலங்களைப் போல விற்பனைக் குழு ஊழியா்களை அரசு ஊழியா்களாக மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, முதல்வா் உறுதி அளித்ததாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, புதுவை விற்பனைக் குழு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை முதல் ஊழியா்கள் வேலைக்குத் திரும்பினா்.