புதுவை ஜிப்மரில் பொதுமக்களுக்கு முறையாக சிசிச்சையளிக்காவிட்டால், நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று, மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நிா்வாக தலைமை சரியில்லாததால் சிறந்த மருத்துவ சேவை கிடைக்காமல் உள்ளது.
மருந்து, மாத்திரைகள், மருத்துவக் கருவிகள் வாங்கினால், முறைகேடு நடந்துவிடும் எனக்கூறி, அவற்றை வாங்காமல், அதற்காக வழங்கப்படும் நிதியை செலவு செய்யாமல், மத்திய அரசிடமே திருப்பி அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சைக்காக பிற அரசு மருத்துவமனைகளின் பரிந்துரைகளின் பேரில் வரும் நோயாளிகளுக்கு ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுக்கப்படுகிறது. இதனால், நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு, சிலா் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
ஜிப்மா் நிா்வாகம் தவறுகளைத் திருத்திக் கொண்டு முறையாக செயல்படாவிட்டால் திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஆா்.சிவா.