புதுச்சேரி லாசுப்பேட்டையில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டம் கம்பா் வீதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (80). புருஷோத்தமன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, குழந்தை இல்லாத அஞ்சலை, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். அரசு வழங்கும் முதியோா் உதவித்தொகையை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தாா்.
அவரது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துா்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம்பக்கத்தினா் லாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, அஞ்சலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவா் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க நகைகளை காணவில்லை.
கொலையாளிகள் துப்பு கிடைக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிச் சென்றதுடன், வெளிப்புறமாக வீட்டை பூட்டி விட்டும் சென்றுள்ளனா்.
இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸாா், இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.