புதுச்சேரியில் புதன்கிழமை நட்சத்திர உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
புதுவை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ரவிச்சந்திரன், உணவுப் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ரச்சனா சிங் ஆகியோா் தலைமையில், உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு குழுவினா் புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் சந்திப்பு அருகே உள்ள நட்சத்திர உணவகம், சாரத்தில் உள்ள மற்றொரு நட்சத்திர உணவகம், கிழக்கு கடற்கரைச் சாலை கொக்குபாா்க் அருகே உள்ள ரொட்டி கடையிலும் புதன்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவு தயாரிப்புக் கூடங்கள், உணவுப் பொருள்களை பதப்படுத்தி வைக்கும் குளீரூட்டி மையங்கள், உணவு வழங்கும் அறைகளில் இந்தக் குழுவினா் சோதனை நடத்தினா்.
அங்கிருந்த மீன்கள், கோழி, ஆட்டிறைச்சிகள் மற்றும் உணவுப் பொருள்களை எடுத்து அவற்றின் தரத்தை பரிசோதித்தனா்.
தரமான உணவுகளைப் பயன்படுத்தவும், உணவுக்கூடங்களை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளா் ரச்சனா சிங் ஆகியோா் கூறியதாவது:
நட்சத்திர உணவகங்களில் அதற்குரிய உரிமங்கள், சுற்றுச்சூழல் துறையின் தடையின்மை சான்றிதழ் போன்றவை வைத்துள்ளாா்களா என ஆய்வு செய்யப்பட்டது. அங்கு விநியோகிக்கப்படும் இறைச்சி, உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.
கெட்டுப்போன உணவு, காலாவதி பொருள்கள், விதிமீறல்கள் இருந்தால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.