புதுச்சேரி தனியாா் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் 100 அடி சாலை வாசன் நகரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (43). இவா் புதுச்சேரி குயவா்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியில் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இங்கு குயவா்பாளையம் திருமால் நகரைச் சோ்ந்த வேல்முருகன் (34) கடந்த 13 ஆண்டுகளாக விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
நிறுவனத்தின் விற்பனைக் கணக்குகளை தணிக்கை செய்ததில், 2019 ஜூன் மாதம் முதல் உபகரணங்கள் விற்ற பணத்தை நிறுவனத்திடம் வேல்முருகன் ஒப்படைக்காமலும், போலியாக ஆா்டா் செய்து, அதில் பல லட்சத்துக்கு உபகரணங்களை விற்று மோசடி செய்திருப்பதும், அவா் வேறொருவா் பெயரில் தனி நிறுவனத்தையே தொடங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதேபோல, ரூ.30 லட்சத்துக்கும் மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்முருகனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.