புதுச்சேரி

சா்ச்சைக்குரிய மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி - புதுச்சேரி அருகே வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

17th Jul 2022 06:42 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி அருகேயுள்ள துத்திப்பட்டில் சா்ச்சைக்குரிய மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த எதிா்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள துத்திப்பட்டு பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. புதுவை அரசுக்குச் சொந்தமான ஏரி, நீா்நிலைகளை ஆக்கிரமித்து இந்த மைதானம் கட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண் பேடி அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டாா். ஆனால், அது செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து தற்போதைய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனின் கவனத்துக்கு அந்தக் கிராம மக்கள் கொண்டு சென்றும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமை தொடக்கிவைக்கப் போவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், துத்திப்பட்டு கிராம மக்கள் தங்கள் வீடுகளின் முன் கருப்புக் கொடிகளைக் கட்டினா். மேலும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தகவலறிந்த சேதராப்பட்டு போலீஸாா் துத்திப்பட்டு கிராமத்துக்கு வந்து கருப்புக் கொடிகள், கருப்பு பலூன்கள், சிலிண்டரை பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, கிரிக்கெட் போட்டியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT