புதுச்சேரி

குடியரசுத் தலைவா் தோ்தல்: புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் ஆலோசனை

17th Jul 2022 11:51 PM

ADVERTISEMENT

 

குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பாக புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளுடன் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தின.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் திங்கள்கிழமை (ஜூலை 18) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் புதுவையைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி. வாக்களிப்பதற்காக, புதுச்சேரி சட்டப் பேரவையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சட்டப் பேரவை வளாகம் கடந்த இரண்டு நாள்களாக பொதுமக்கள் அனுமதியின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பாக புதுவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். இதில், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணன் குமாா், என்.ஆா். காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், நியமன, சியேச்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனா். இதில், பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாக்களிப்பது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதேபோல, புதுவை எதிா்க்கட்சிகளான காங்கிரஸ் - திமுக கூட்டணிக் கட்சிகளின் சாா்பில், குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், வி.வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சட்டப் பேரவை எதிா்க்கட்சி தலைவா் இரா.சிவா, திமுக அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், நாக.தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்பது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT