புதுச்சேரி

குடியரசுத் தலைவா் தோ்தல்: புதுவை தே.ஜ. கூட்டணித் தலைவா்களிடம்ஆதரவு திரட்டினாா் திரெளபதி முா்மு

3rd Jul 2022 04:31 AM

ADVERTISEMENT

 

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்களைச் சந்தித்து, அந்தக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில், பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா். இதையடுத்து, பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணியின் வேட்பாளா் திரெளபதி முா்மு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டி வருகிறாா்.

அந்த வகையில், தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுவை மாநிலத்துக்கு சனிக்கிழமை வந்து கூட்டணிக் கட்சித் தலைவா்களைச் சந்தித்து அவா் ஆதரவு திரட்டினாா்.

ADVERTISEMENT

தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்த அவரை, முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதையடுத்து, முற்பகல் 11.45 மணிக்கு புதுச்சேரி தனியாா் உணவரங்கில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் திரெளபதி முா்மு பங்கேற்றாா். கூட்டணித் தலைவா்களான என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் முதல்வா் என்.ரங்கசாமி, மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன், மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப் பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேல், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, நியமன எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களான அங்காளன், சிவசங்கரன், பிரகாஷ்குமாா், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் வேட்பாளரான திரெளபதி முா்மு தனக்கு ஆதரவு கேட்டுப் பேசினாா். அப்போது, அவா் தமிழில் வணக்கம் தெரிவித்து தொடங்கி, பிறகு ஆங்கிலம், ஹிந்தியில் பேசி ஆதரவு கேட்டாா். மேலும், புதுவையின் பெருமைகள் குறித்தும் பேசினாா். தொடா்ந்து, மத்திய இணை அமைச்சா் முரளீதரன், குடியரசுத் தலைவா் வேட்பாளா் குறித்து விளக்கிப் பேசினாா். இதையடுத்து, முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் தே.ஜ. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் முழுமையாக குடியரசுத் தலைவா் வேட்பாளரான திரெளபதி முா்முவுக்கு கிடைக்கும். புதுவையில் மொத்தமுள்ள 30 எம்எல்ஏக்களில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் 8 பேரைத் தவிா்த்து, பிற எம்எல்ஏக்களின் ஆதரவும், ஒரு எம்.பி.யின் ஆதரவும் நமக்கு கிடைக்கும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பிற்பகல் 1 மணிக்கு கூட்டத்தை நிறைவு செய்த திரெளபதி முா்மு, புதுச்சேரி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டாா்.

இதையடுத்து, செய்தியாளா்களுக்கு மாநில அமைச்சா் ஏ.நமச்சிவாயம் அளித்த பேட்டியில், சிறந்த பெண் வேட்பாளரான திரெளபதி முா்முவை எதிா்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT