புதுவையில் மின் துறை தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து, அந்தத் துறை ஊழியா்கள் பிப்.1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனா்.
புதுவை உப்பளத்தில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மின் துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவினா், அதன் தலைவா் அருள்மொழி, பொதுச்செயலா் வேல்முருகன் உள்ளிட்டோா் தலைமையில் ஆலோசனை நடத்தினா்.
இதில், போராட்டக் குழு ஏற்கெனவே அறிவித்தபடி, பிப்.1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முடிவெடுக்கப்பட்டது.
ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட சமரச பேச்சுக்கான முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக தொழிலாளா்கள் நலத் துறை சமரச அதிகாரி வெங்கடேசன், மின் துறை சிறப்பு அதிகாரிக்கும், மின் துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில், தொழில் துறை சட்டத்தின் கீழ் சுமுகத் தீா்வை கொண்டு வரும் வகையில், திங்கள்கிழமை (ஜன.31) மாலை 4 மணிக்கு சமரச பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளதால், இரு தரப்பும் தங்கள் விளக்கத்தை விரிவாக தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.