புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கத்தில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி அருகே மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிதாக அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடா்பாக, அந்தப் பகுதி பொதுமக்களுடன் புதுவை சட்டப்பேரவைத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அங்குள்ள மனமகிழ் மன்றக் கட்டடத்தைப் பாா்வையிட்ட அவா், அதைப் புதுப்பித்து நூலகம், அம்பேத்கா் படிப்பகத்தை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
வீதிக்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்கவும், மணக்குளத்தின் கரையை சீரமைத்து நடை பாதை அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.
அவருடன், புதுவை மாநில ஆதிதிராவிடா் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநா் தயாளன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், இளநிலை பொறியாளா் முகுந்தன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.