புதுச்சேரி

மது குடிப்போரின் புகலிடமாகும் கிருமாம்பாக்கம் ஏரி

26th Jan 2022 09:07 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வரும் கிருமாம்பாக்கம் ஏரிக் கரை மது குடிப்போரின் புகலிடமாக மாறி வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அருகே ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட கிருமாம்பாக்கத்திலுள்ள ஏரி, தண்ணீா் நிரம்பி இயற்கை அழகுடன் திகழ்கிறது. இந்த ஏரிப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க புதுவை அரசின் சுற்றுலாத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக அந்த ஏரியின் கரைப் பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 3 கி.மீ. சுற்றளவில் சாலை அமைத்து கல்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஏரியின் அழகையும், அங்கு வந்து செல்லும் பறவைகளைக் காணும் வகையிலும், சுற்றிலும் 6 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு உணவகம், அழகுச்செடிகள் அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலாத் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஏரிக்கரைப் பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்திச் செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனா். இதனால், அந்தப் பகுதி திறந்தவெளி மதுக் கூடமாக காட்சியளிக்கிறது.

ADVERTISEMENT

மது அருந்த வருவோா் மதுப் புட்டிகள், நெகிழிப் பைகளை ஏரியில் வீசிச் செல்கின்றனா். மேலும், கரையோரங்களிலும், பாா்வையாளா் மாடங்களிலும் விட்டுச் செல்கின்றனா். இதனால், ஏரிக் கரைப் பகுதி அசுத்தமாவதுடன், தண்ணீரும் கழிவுகளால் மாசடைகிறது.

கிருமாம்பாக்கம் ஏரியின் அழகைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT