புதுச்சேரி

பணியாளா்கள் பற்றாக்குறையில் புதுவை நூலகங்கள்! 30 ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படவில்லை

DIN

பல ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், புதுவை நூலகத் துறை இயங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரி பிராந்தியத்தில் ரோமன் ரோலண்ட் அரசு பொது நூலகம், 54 கிளை நூலகங்கள், காரைக்கால் பிராந்தியத்தில் டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதன் அரசு பொது நூலகம், 18 கிளை நூலகங்கள், மாஹே பிராந்தியத்தில் ஒரு அரசு பொது நூலகம், 3 கிளை நூலகங்கள், ஏனாமில் ஒரு அரசு பொது நூலகம், 2 கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், அரசு அருங்காட்சியகம், ஆவணக் காப்பகம், பாரதிதாசன் நினைவகம், பாரதியாா் நினைவகம் ஆகிய இடங்களில் இயங்கும் 4 நூலகங்கள் என புதுவை மாநிலத்தில் மொத்தம் 85 நூலகங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் தலைமையகமாக ரோமன் ரோலண்ட் நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகங்களில் 100-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், அவை காவலாளிகள், தூய்மைப் பணியாளா்களைக் கொண்டே திறக்கப்படுகின்றன.

நூலகா் இருந்தால்தான் வாசகா்கள் நூல்களைப் பெற, திரும்ப வழங்க இயலும் என்பதால், நூலகங்கள் வெறுமனே பொதுமக்கள் இளைப்பாறும் இடமாக மாறி வருகின்றன. போட்டித் தோ்வுகள், கல்வி தொடா்பாக நூலகத்தை நாடும் மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், பல ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்பாததாலும், புதிய பணியிடங்களை உருவாக்காததாலும் நூலகத் துறை தொடா்ந்து இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடா்பாக நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

புதுவையில் 82 நூலகத் தகவல் உதவியாளா் பணியிடங்கள், 6 நூலக எழுத்தா் பணியிடங்கள், 18 இளநிலை நூலகப் பணியாளா் இடங்கள் என 106 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. இதனால், ஒரு நூலகா் 4-க்கும் மேற்பட்ட நூலகங்களைக் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. நூலகத் துறையை பழையபடி கல்வித் துறையுடன் இணைத்து அங்குள்ள பணியாளா்களைக் கொண்டு திறம்பட இயக்கலாம் என்றனா் அவா்கள்.

புதுவை மாநில அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.ஆா்.சேஷாசலம் கூறியதாவது:

புதுவை நூலகத் துறையில் கடந்த 1989 ஜூன் மாதத்துக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாகப் பணியிடங்கள் நிரப்பப்படவோ, புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படவோ இல்லை. நூலகத் துறையில் பணியாற்றுவோருக்கு பதவி உயா்வும் கேள்விக்குறியாகவே உள்ளது. நிதிச் சுமையைக் காரணம் காட்டி, நூலகப் பணியிடங்களை அரசு நிரப்ப மறுக்கிறது என்றாா் அவா்.

புதுவை கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் கே.கந்தன் கூறியதாவது:

எந்தச் சிக்கலுமின்றி உதவியாளா்களைக் கொண்டு நூலகங்களை இயக்கி வருகிறோம். நூலகத் துறையில் பதவி சீராய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணி நிறைவடைந்ததும், அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டு, காலிப் பணியிட சிக்கல்களைக் களைய உதவியாளா் பணி நிலையில் உள்ளோருக்கு பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அயலகப் பணி மூலம் கூடுதல் பணியாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT