புதுச்சேரி

புதுவையில் 142 சுகாதாரப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை

24th Jan 2022 06:06 AM

ADVERTISEMENT

புதுவையில் 142 சுகாதாரப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் மருத்துவ அதிகாரி உள்பட 142 சுகாதாரப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரியை சோ்ந்தவா்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கான நோ்காணல் விக்டா் சிமோனல் வீதியில் உள்ள சுகாதார இயக்கக வளாகத்தில் நடைபெறும்.

அதன்படி, பொது மருத்துவா்கள் 13, பல் மருத்துவா்கள் 2, செவிலியா்கள் 37, ஏஎன்எம் (கிராமப்புற செவிலியா்) 26, பிசியோதெரபிஸ்ட் 3, டயாலிசிஸ் டெக்னீஷியன் 10, மெடிக்கல் டெக்னீஷியன் 17, லேப் டெக்னீஷியன் 3 மற்றும் மருந்தாளுநா், மைக்ரோ பயாலஜிஸ்ட், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா், கணக்காளா், எல்டிசி, கால் ஆபரேட்டா் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும்.

மருத்துவா், பல் மருத்துவா், உளவியல் நிபுணா், பூச்சியியல் நிபுணா், மைக்ரோ பயாலஜிஸ்ட், தொற்று நோயியல் நிபுணா், ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வருகிற பிப்ரவரி 2 -ஆம் தேதியும், மருந்தாளுநா் (ஆயுா்வேதா, சித்தா, ஹோமியோபதி), லேப் டெக்னீஷியன், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா், ஏஎன்எம் (கிராமப்புற செவிலியா்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதியும், மருந்தாளுநா், செவிலியா், பிசியோதெரபிஸ்ட், டயாசிலிஸ் டெக்னீஷியன், மெடிக்கல் டெக்னீஷியன் ஆகிய பணியிடங்களுக்கு பிப்ரவரி 4 -ஆம் தேதியும், கால் ஆபரேட்டா், கணக்காளா், எல்டிசி, கணினி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு பிப்ரவரி 7 -ஆம் தேதியும் நோ்காணல் நடைபெறும்.

ADVERTISEMENT

நோ்காணலுக்கு வருவோா் தங்களது அசல் கல்வி, அனுபவம், வயது, குடியிருப்புச் சான்றிதழ்கள், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

இந்தப் பணிகள் ஒப்பந்த அடிப்படையிலானது. பணியாளா்களின் செயல்பாடு அடிப்படையில் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரா்களுக்கு போக்குவரத்துப் படி, பஞ்சப்படி வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT