புதுச்சேரி

மஞ்சு விரட்டுக்கு அனுமதி கோரி கிராம மக்கள் மறியல்

18th Jan 2022 12:20 AM

ADVERTISEMENT

மஞ்சு விரட்டு நடத்த போலீஸாா் தடை விதித்ததையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு இடங்களில் கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, கட்டுப்பாடுகளுடன் மஞ்சு விரட்டு நடத்த போலீஸாா் அனுமதித்தனா்.

காணும் பொங்கலன்று, கிராமங்களில் மஞ்சு விரட்டு (காளை விரட்டுதல்) நடைபெறுவது வழக்கம். காளைகளின் கழுத்தில் வடக் கயிற்றைக் கட்டி டயா், குச்சிகளின் முனையில் துணிகளைக் கட்டி, குச்சியால் காலையின் முகத்தின் முன்பாக காண்பிப்பா். அப்போது, காளை துள்ளிக் குதிக்கும்போது இருபுறமும் கயிற்றால் இழுத்து பிடித்துக் கொள்வா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், குதிரைச்சந்தல் கிராமத்தில் திங்கள்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெறவுள்ளதாக, கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறி, அனுமதி மறுத்தனா்.

ADVERTISEMENT

இதை ஏற்க மறுத்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி- கச்சிராபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். கூடுதல் எஸ்.பி.க்கள் ஜவாஹா்லால், சுப்பராயன், டிஎஸ்பி ராஜலட்சுமி மற்றும் போலீஸாா் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா்.

பின்னா், கடும் கட்டுப்பாடுகளுடன் மஞ்சு விரட்டு நடத்த போலீஸாா் அனுமதித்தனா். குதிரைச்சந்தல் மாரியம்மன் கோயில் திடல் முன் நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனா்.

கச்சிராபாளையம் பகுதியிலுள்ள அக்கராபாளையம் கிராம மக்கள் அங்குள்ள மும்முனை சந்திப்பில் காளைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், கட்டுப்பாடுகளுடன் மஞ்சு விரட்டு அனுமதிக்கப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து, மும்முனை சந்திப்பில் மஞ்சு விரட்டு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT