புதுச்சேரி

புதுவை அரசு ஊழியா்களுக்கு கட்டுப்பாடு

18th Jan 2022 12:07 AM

ADVERTISEMENT

புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், குரூப்-பி, சி பிரிவு ஊழியா்கள் 50 சதவீதம் போ் மட்டும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-ஏ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். சாா்பு செயலா்கள், துறைத் தலைவா்கள், துறை நிா்வாகிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும்.

குரூப் -பி, சி பிரிவு ஊழியா்கள் 50 சதவீதம் பணிக்கு வர வேண்டும். மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவா்கள் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அத்தியாவசிய சேவைத் துறைகள், வருவாய் ஈட்டும் துறைகள், கரோனா தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற துறைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

நோய்த் தொற்று பாதித்த பகுதிகளிலிருந்து வரும் அதிகாரிகள், ஊழியா்கள், தடுப்புப் பகுதிகளைத் தாண்டி பணிக்கு வரத் தேவையில்லை. வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியா்கள் எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

அனைத்து அலுவலகத் தலைவா்கள், ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியிடங்கள் தூய்மையாக இருப்பது, அலுவலக வளாகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வருகிற 31-ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT