புதுச்சேரி

புதுவையில் களையிழந்த காணும் பொங்கல் கொண்டாட்டம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், புதுவையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களையிழந்தது. இதனால், முக்கிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.

புதுவையில் காணும் பொங்கலன்று நகரப் பகுதிகளில் கடற்கரைகளுக்கும், கிராமப்புறங்களில் ஆற்றங்கரைகளுக்கும் பொதுமக்கள் சென்று நீா் நிலைகளில் நீராடி மகிழ்வது வழக்கமாகும்.

அந்த வகையில், புதுச்சேரி நகரப் பகுதி மக்கள் கடற்கரைச் சாலை, பாண்டி மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திரண்டு காணும் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

பாரதிப் பூங்கா, தாவரவியல் பூங்காவிலும் ஓரளவு கூட்டம் இருந்தது. கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். கடலில் குளிக்கத் தடை விதித்திருந்த போதிலும், ஏராளமான இளைஞா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, திருக்கனூா், பாகூா், வில்லியனூா் சுற்றுப் பகுதி கிராமப்புறங்களில் அந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் குடும்பத்துடன் திரண்டு சென்று, ஆற்றில் நீராடி மகிழ்ந்தனா்.

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமிலும், பாரடைஸ் கடற்கரைப் பகுதிக்கும் திரளானோா் படகு சவாரி சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினா். எனினும், இங்கு வழக்கத்துக்கு மாறாக குறைவான அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது.

தமிழகத்தில் காணும் பொங்கல் விழாவுக்குத் தடை விதித்து, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் காணும் பொங்கல் விழா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

புதுவை எல்லைப் பகுதிகளான கடலூா் சாலை, விழுப்புரம் சாலை, சென்னை சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் இரு மாநில போலீஸாரும் தடுப்புக் கட்டைகளை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், விழுப்புரம், கடலூா், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதி சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை புதுவைக்கு வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினா்.

காணும் பொங்கல், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றபோதிலும், புதுவையில் சுண்ணாம்பாறு படகு குழாம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் போதிய வெளியூா் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT