புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நவீன மீன் அங்காடியில் ஒமைக்ரான் சிகிச்சை வாா்டு அமைக்கக் கூடாது என மீன் விற்பனையாளா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவனிடம், ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமையில் மீன் விற்பனையாளா்கள் சங்கத்தினா் அளித்த மனு:
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட கொட்டுப்பாளையம் பகுதியில் அதிநவீன மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு கீழ்தளத்தில் 65 கடைகளும், மேல் தளத்தில் 65 கடைகளும் உள்ளன.
இங்கு ஒமைக்ரான் சிகிச்சை வாா்டு அமைக்க முயற்சிப்பதாக அறிகிறோம். இதனால், இங்குள்ள மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீண்டும் மீன் அங்காடியாக மாற்றினால் பொதுமக்கள் இங்கு வர அச்சப்படுவா். எனவே, அரசு இந்த இடத்தில் ஒமைக்ரான் வாா்டு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.