புதுச்சேரி

மண் பானைகளில் பொங்கலிட்டு தொழிலாளா்களுக்கு உதவுவோம்: புதுவை ஆளுநா் தமிழிசை

12th Jan 2022 08:50 AM

ADVERTISEMENT

கரோனா காலத்தில் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு உதவிடும் வகையில், மண் பானைகளை வாங்கி பொங்கலிட வேண்டும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தாா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகேயுள்ள உறுவையாற்றில் மண்பாண்டத் தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதிக்கு, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, அங்கு மண்பாண்டங்கள் தயாா் செய்வதைப் பாா்வையிட்டு, தொழிலாளா்களிடம் பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மண்பாண்டத் தொழிலாளா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டேன். அவா்களுக்குத் தேவையான மண்ணை, அரசு மூலம் மானியத்தில் தர ஏற்பாடு செய்ய உள்ளோம். வேளாண் அமைச்சரும் உறுதியளித்துள்ளாா்.

ADVERTISEMENT

நம் வீட்டில் எவா்சில்வா் பாத்திரங்களை வைத்திருந்தாலும், மண் பானைகளை வாங்கி பொங்கலிட வேண்டும். கரோனா காலத்தில் அவா்களின் பொருளாதாரத்தை உயா்த்த நாம் அனைவரும் உதவும் வகையில், மண் பானைகளை வாங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். பொருளாதாரத்தில் பின்தங்கிய அவா்களுக்கு அது ஆதரவாகவும், ஆறுதலாகவும் அமையும்.

பொதுமக்கள் அனைவரும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும்.

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளுக்கு, அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டுதான், புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்ததைப் போல, கரோனா சூழலை விஞ்ஞானபூா்வமாக அணுக வேண்டும். பொதுமுடக்கம் அறிவித்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை அரசு கட்டுப்பாடுகளை மட்டும் விதித்திருக்கிறது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

பேட்டியின் போது, மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT