புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்தால் முதல்வா் ரங்கசாமிதான் பொறுப்பு: வே.நாராயணசாமி

1st Jan 2022 10:41 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்தால், அதற்கு முதல்வா் ரங்கசாமிதான் பொறப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அதற்கான விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலையில், தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், புதுச்சேரிக்கு பல மாநிலங்களைச் சோ்ந்தவா்களையும் வரவழைத்து, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது, உயா் நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகமானால், அதற்கு முதல்வா் ரங்கசாமிதான் பொறப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இந்த நோய்த் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசு உருவாக்கவில்லை.

ADVERTISEMENT

முதல்வா் ரங்கசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய பாஜக அரசு எல்லா வகையிலும் புதுவையை வஞ்சிக்கிறது. முதல்வரின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை. கேட்கிற நிதியைக் கொடுக்கவில்லை.

அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலத்தை ஆளும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு உள்ளது. ஆனால், அவா்கள் கடந்த 6 மாதங்களாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இனியாவது தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவோம் என்று தோ்தல் வாக்குறுதியில் பாஜக குறிப்பிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று மத்திய உள் துறை அமைச்சரே கூறியுள்ளாா்.

புதுவை அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை. அரசு அதிகாரிகள் முதல் அமைச்சா்கள் வரை எல்லோரும் ஊழலில் திளைத்திருக்கிறாா்கள் என்றாா் நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT