புதுச்சேரி

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

1st Jan 2022 10:42 PM

ADVERTISEMENT

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

2022 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை, பழைய துறைமுகம், சுற்றுலாக் கழக உணவு விடுதி, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுற்றுலாத் துறை சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் திரளத் தொடங்கினா். வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது.

இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்வுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு 2022-ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி, கடற்கரைச் சாலையில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ADVERTISEMENT

அப்போது, கடற்கரை காந்தி சிலையைச் சுற்றிலும் லேசா் ஒளி காட்சிகளுடன், வாணவேடிக்கைகள் நடைபெற்றன. கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் படக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

தடியடி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்களை வெளியேற்றும் வகையில், சனிக்கிழமை அதிகாலை 12.20 மணிக்கு போலீஸாா் லேசான தடியடி நடத்தி விரட்டினா். இதனிடையே, அதிகாலை 12.30 மணிக்கு பலத்த மழை பெய்ததால், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடற்கரை சாலையிலிருந்து வெளியேறினா்.

அமைச்சா் ஆய்வு: முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோா் கடற்கரைப் பகுதிக்கு நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பொதுமக்களுக்கு அவா்கள் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

இதேபோல, பாண்டி மெரீனா கடற்கரை, பழைய துறைமுகம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் தனியாா் பங்களிப்புடன் நடைபெற்ற புத்தாண்டு விழாக்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா்.

புதுவையில் உயா் நீதிமன்ற உத்தரவின்படி, இரவு 10 மணிக்கு அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன.

புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை, நகரப் பகுதிகளில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு, வாகனப் போக்குவரத்தை மாற்றி அமைத்தல், போக்குவரத்து நெரிசலை சீா்செய்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டனா். சுற்றுலாத் துறை சாா்பில் இலவசமாக சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன.

.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT