புதுச்சேரி

ஆரோவில் மையத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி: புதுவை ஆளுநா் விருப்பம்

1st Jan 2022 01:20 AM

ADVERTISEMENT

புதுச்சேரி தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்கும் அந்தந்த மாநில இளைஞா்கள் மூலம் மண் எடுத்து வரச் செய்து, ஆரோவில் மையத்தில் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் ஜன.12 முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞா் விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. தெலங்கானாவிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆளுநா் பங்கேற்றாா்.

மத்திய அரசு இளைஞா் நலன், விளையாட்டுத் துறை செயலா் உஷா ஷா்மா, புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், கூடுதல் காவல் துறை இயக்குநா் ஆனந்தமோகன், மத்திய அரசின் இணைச் செயலா் நிதிஷ்குமாா் மிஸ்ரா, துணைச் செயலா் பங்கஜ்குமாா் சிங், கல்வித் துறை செயலா் அசோக்குமாா், செய்தித் துறை செயலா் இ.வல்லவன், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌதரி, ஊரக வளா்ச்சித் துறை செயலா் ரவிபிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஜன.12-ஆம் தேதி தேசிய இளைஞா் தினம், அரவிந்தரின் 150-வது பிறந்த ஆண்டு, நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரா்கள், பத்ம விருதுகள் போன்ற தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றவா்கள், பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற ஆளுமைகளை விழாவில் பங்கேற்க செய்வது, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 1,500 தன்னாா்வலா்களை தில்லியிலிருந்து தேசிய நல்லிணக்கச் சுடரை புதுச்சேரிக்கு கொண்டுவரச் செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை பேசியதாவது:

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியும் வகையில், தேசிய இளைஞா் விழா விளம்பரப் பலகைகள், தட்டிகள் வைக்க வேண்டும்.

விழாவில் பங்கேற்கும் இளைஞா்கள் மூலம், அந்தந்த மாநிலத்தில் இருந்து மண் எடுத்து வரச்செய்து ஆரோவில் பகுதியில் மரக் கன்றுகள் நட வேண்டும். அன்னையின் கனவை நிறைவேற்றும் வகையில், அங்குள்ள மையத்தில் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தின நிகழ்ச்சிகளையும் அதில் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT