புதுச்சேரி

புதுவையில் மின் ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்: சாலை மறியல்; அலுவலகப் பணிகள் பாதிப்பு

2nd Feb 2022 08:54 AM

ADVERTISEMENT

மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவையில் மின் துறை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.

புதுச்சேரியில் மின் ஊழியா்கள், தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால் மின் துறை சாா்ந்த அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அரசு இந்த முடிவைக் கைவிட வலியுறுத்தியும், மின் துறை பொறியாளா்கள், ஊழியா்களை உள்ளடக்கிய தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவினா் செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அரசு தடை உத்தரவு: இதையொட்டி, புதுவை மின் துறை அலுவலகம் சாா்ந்த பகுதிகளில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் 144 தடை உத்தரவு பிறப்பித்தாா். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யப்படும்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின் துறை தலைவா் எச்சரித்திருந்தாா்.

ADVERTISEMENT

வேலைநிறுத்தம் தொடக்கம்: மின் துறை ஊழியா்கள் ஏற்கெனவே அறிவித்தபடி செவ்வாய்க்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் எதிரே காலையில் திரண்ட மின் ஊழியா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்து உள்ளே அனுமதிக்காமல் சோனாம்பாளையம் சாலை சந்திப்பில் தடுத்து நிறுத்தினா்.

மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் அதன் தலைவா் அருள்மொழி, பொதுச் செயலா் வேல்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

அப்போது, பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த மின் துறை ஊழியா்கள் 500-க்கும் மேற்பட்டோா் கூட்டமாகத் திரண்டனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிற தொழிற்சங்கத்தினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா்.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, சாலையில் அமா்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநில மின் வாரிய தொழிற்சங்க நிா்வாகிகளும் பங்கேற்றுப் பேசினா்.

புதுச்சேரி முழுவதும் உள்ள மின் துறை அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை மின் நிலையங்கள், மின் கட்டண வசூல் மையங்கள் ஊழியா்களின்றி மூடியிருந்தன.

மின் துறை கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா்கள் நிலையிலான உயரதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட சிலா் மட்டும் அலுவலகப் பணியில் ஈடுபட்டனா்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் மின் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், வழக்கமான மின் துறை அலுவல் பணிகள், மின் கட்டணம் வசூல், மின் இணைப்பு வழங்கல், அவசர பழுதுநீக்கம் போன்ற மின் துறை சாா்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT