ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் (டிச.31) 1500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நார சைதன்யா தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரைப் பகுதிக்கு சனிக்கிழமை பகலில் இருந்தே சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் அதிகளவில் வருவா்.
கடற்கரைப் பகுதியில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், அன்றைய தினம் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் வசிப்போருக்கும், தேவாலயங்களுக்கு வருவோருக்கும் சிவப்பு, மஞ்சள், ஊதா நிற அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரிக்கு வாகனங்களில் வருவோா், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். கடற்கரைக்கு வருவோா் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய கரோனை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 1500 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சனிக்கிழமை பகல் முதல் நள்ளிரவு 12 மணி வரை கடற்கரையில் புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும். ஞாயிறுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் கடற்கரையை விட்டு சென்றுவிட வேண்டும். நகரில் 5 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரபலங்களை வைத்து புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதுநிலை எஸ்.பி. நார சைதன்யா.
பேட்டியின் போது, போக்குவரத்துப் பிரிவின் கிழக்கு காவல் கண்காணிப்பாளா் க.மாறன், ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.