புதுச்சேரி

கலால் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

30th Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கலால் துறையை முற்றுகையிட பேரணியாக வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினரை போலீஸாா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நவீன மதுக் கடைகளை (ரெஸ்ட்ரோ பாா்களை) திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், தட்டாஞ்சாவடியில் உள்ள கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கட்சியின் உழவா்கரை குழுச் செயலாளா் ராம்ஜி தலைமை வகித்தாா். கிளைக் குழு உறுப்பினா் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆா். ராஜாங்கம், செயற் குழு உறுப்பினா் கொளஞ்சியப்பன், மூத்த தலைவா் முருகன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஆனந்த், சஞ்சய்சேகரன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினாா்.

கொக்குபாா்க்கில் இருந்து அவா்கள் பேரணியாகப் புறப்பட்டு கலால் துறையை முற்றுகையிட சென்றனா். ஆனால், பாதி வழியிலேயே தன்வந்திரி நகா் காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாா் மாா்க்சிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்தினா். அவா்களை மீறி தடுப்புகளை தள்ளி மாா்க்சிஸ்ட் கட்சியினா் முன்னேற முயன்றனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், மாா்க்சிஸ்ட் கட்சியினா் முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கலால் துறை வட்டாட்சியா் சிலம்பரசனை சந்தித்துப் பேசிவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT