புதுவை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வீட்டுக்கு அரசு பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் வந்து சந்தித்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 214 போ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இந்த இடமாற்றத்தில் 90 ஆசிரியா்கள் விதிமுறைக்கு மாறாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதையடுத்து அவா்கள் முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோரிடம் மனு அளித்தனா். இதையடுத்து அவா்கள் தற்போதைய பணியிடத்தில் தொடர வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பழைய பணியிடத்தில் அனுமதித்த கல்வி அமைச்சரைச் சந்தித்து நன்றி கூறுவதற்கு மணவெளியில் உள்ள வீட்டுக்கு சனிக்கிழமை காலை சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் சென்றனா். புதுவை ஊரகப் பகுதியில் பணியாற்றும் முதுநிலை தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், தங்களை நகா்ப்புறங்களில் பணியாற்ற அனுமதிக்கக் கோரி அமைச்சரைச் சந்தித்தனா். மேலும், முறையாக இடமாறுதல் கலந்தாய்வை நடத்தவும் வலியுறுத்தினா்.