புதுச்சேரி

புதுச்சேரி அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்

10th Dec 2022 04:56 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட கடலரிப்பால் மீனவ கிராமத்தில் 8 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட மீனவ கிராமத்திலும் 5 வீடுகள் கடலரிப்பால் இடிந்து விழுந்தன.

மாண்டஸ் புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன்காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்தது. புதுவை மாநிலத்துக்குள்பட்ட பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் கடல் சீற்றம் அதிகரித்தது. கடல் அலைகள் சுமாா் 2 மீட்டருக்கும் உயரமாக வந்ததால், கடலோரத்தில் குடியிருப்போா் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு இடத்தில் தங்கினா்.

வீடுகள் இடிந்தன: புதுச்சேரி பிள்ளைச்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவில் கடலோரம் இருந்த 8 வீடுகள் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட கடலரிப்பால் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தன. மேலும், 23 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

கடலரிப்பால் வீடுகள் இடிந்து அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி மீனவா்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தூண்டில் வளைவு அமைக்காததால், கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதாக அவா்கள் தெரிவித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

புதுச்சேரி புஸ்ஸி வீதி, சாரம், காமராஜா் நகா் பகுதிகளில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை தீயணைப்புப் படையினா், வனத் துறையினா், புதுச்சேரி நகராட்சி ஊழியா்கள் அகற்றினா். நோணாங்குப்பம் படகுத் துறையிலுள்ள அறைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

மரக்காணத்தில் கடல் சீற்றம்: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் உள்பட 40 கி.மீ. தொலைவு கடலோரப் பகுதிகளாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி உயரத்துக்கு மேல் அலை எழும்பியது. இதனால், 19 மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட புதுச்சேரியையொட்டியுள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கடலரிப்பு ஏற்பட்டு 5 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மொத்தம் 19 மீனவக் கிராமங்களிலும் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT