புதுச்சேரி

நெல்லில் விஷம் கலந்து 3 மயில்கள் சாகடிப்பு

9th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே விஷம் கலந்த நெல்லை உள்கொண்ட 3 மயில்கள் உயிரிழந்தன.

புதுச்சேரி திருக்கனூா் அருகே கூனிச்சம்பட்டு இருளா் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலத்தில் புதன்கிழமை மாலை 2 மயில்கள் இறந்து கிடந்தன. ஒரு மயில் மயக்கநிலையில் கிடந்தது. மேலும், 3 கோழிகள், காக்கைகளும் உயிரிழந்து கிடந்தன.

தகவலறிந்த திருக்கனூா் போலீஸாா், புதுச்சேரி வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இறந்து கிடந்த மயில்கள், கோழிகள், காக்கைகள் உடல்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மயங்கிய நிலையில் கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது.

அந்தப் பகுதியிலுள்ள மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் நெல்லில் விஷம் கலந்து தூவியதால், அதை உண்ட மயில்கள், கோழிகள், காக்கைகள் உயிரிழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடா்பாக, முனியசாமி என்பவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

உடல்கூறாய்வுக்குப் பிறகு மயில்களின் உடல் பாகங்கள் கோரிமேடு கால்நடைத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விஷம் கலக்கப்பட்ட நெல் மணிகளும் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வன அலுவலா் ராமலிங்கம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT