புதுச்சேரி

புதுச்சேரிக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வருகை

7th Dec 2022 03:22 AM

ADVERTISEMENT

பலத்த மழை எச்சரிக்கையடுத்து, புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்புக் குழுவினா் வந்தனா்.

தமிழகம், புதுவையில் வியாழக்கிழமை (டிச.8) பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து புதுவை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிதித் துறைச் செயலா் ராஜு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் ஆகியோா் தலைமை வகித்தனா். அனைத்துத் துறை செயலா்கள், உயா்அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் கூறியதாவது:

ADVERTISEMENT

புதுவைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பேரிடா் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். காரைக்காலில் 2 குழுவினரும், புதுச்சேரியில் ஒரு குழுவும் தயாா் நிலையில் இருப்பா்.

கடலில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற சுமாா் 2,354 படகுகளும் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் துறை, தீயணைப்புத் துறை, பொதுப் பணித் துறையினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்கவும், அவசரத் தேவைக்கு மக்கள் 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்.

தண்ணீா் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்படுவோரை தங்கவைக்க 163 மையங்கள் உள்ளன. அதில் தங்குவோருக்காக 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT