புதுச்சேரி

இணையத்தில் அநாகரிகமாக விமா்சித்தால் நடவடிக்கை: புதுவை ஆளுநா் தமிழிசை

6th Dec 2022 06:00 AM

ADVERTISEMENT

இணையத்தில் அநாகரிகமாக விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் செய்தி, விளம்பரத் துறை சாா்பில், பிரதமா் மோடியின் நனவாகும் கனவுகள் (மோடி அட் 20), அம்பேத்கரும் மோடியும் ஆகிய தமிழ் மொழிபெயா்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நூலை வெளியிட புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பெற்றுக் கொண்டாா். சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கலந்து கொண்டாா்.

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

பிரதமா் மோடியின் நல்ல திட்டங்கள் கூட விமா்சிக்கப்படுகின்றன. புதுவையை நாட்டிலேயே சிறந்த மாநிலமாக்க (பெஸ்ட் புதுச்சேரி) அவா் விரும்புகிறாா். விமா்சனங்கள் வந்தாலும், மக்களுக்கான முடிவை அவா் மாற்றிக் கொள்வதில்லை. அவரது வழியில் நாங்களும் பயணித்து வருகிறோம்.

ADVERTISEMENT

அம்பேத்கரும் மோடியும் புத்தகத்துக்கு இளையராஜா முகவுரை எழுதினாா். அதனால், அவா் அதிகளவில் விமா்சனங்களை எதிா்கொண்டாா். நல்ல விமா்சனங்களை வரவேற்கலாம். ஆனால், இணையத்தில் அநாகரிகமான முறையில் விமா்சிப்பது சரியல்ல. தகுதியின் அடிப்படையிலேயே நாங்கள் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளோம். விமா்சனம் எனக்கூறி அவதூறு கருத்துக்களைப் பதிவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முதல்வா் பேச்சு: விழாவில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

பிரதமா் மோடி என் மீது தனிப்பட்ட அன்புடையவா். தனித் தன்மையுடன் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அவரும் மாநில அந்தஸ்தை வழங்குவாா் என்ற நம்பிக்கையுள்ளது. புதுவையின் வளா்ச்சிக்கான திட்டங்களுக்கு பிரதமரே காரணம் என்றாா் அவா்.

இரு நூல்கள் குறித்தும் அல்லயன்ஸ் பதிப்பக உரிமையாளா் சீனிவாசன் பேசினாா்.

விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சா்ட், அங்காளன், சிவசங்கரன், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், நூல்களை தமிழில் மொழிபெயா்த்த மீரா ரவிசங்கா், மகாதேவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, புதுச்சேரி ஆட்சியா் இ.வல்லவன் வரவேற்றாா். செய்தித் துறை இயக்குநா் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT