புதுச்சேரி

மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த நடவடிக்கை: புதுவை முதல்வா்

6th Dec 2022 02:46 AM

ADVERTISEMENT

புதுவையில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசு முன்கூட்டியே செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதுவை மாணவா்களுக்கான 131 இடங்களில் 123 மாணவா்களுக்கான சோ்க்கை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு உத்தரவை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் மருத்துவக் கல்வி பயில்வோா் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீட்டில் பலரும் பயிலும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

தனியாா் மருத்துவக் கல்லூரியில் அரசுக்கான இடஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. முதலில் கட்டணத்தை செலுத்திவிட்டு அதை அரசிடமிருந்து பெற்றோா் வாங்கிவருகின்றனா். ஆனால், தற்போது கட்டணத்தை மாணவா் சோ்க்கையின் போதே செலுத்துவதற்கு தனியாா் கல்லூரிகள் வலியுறுத்துகின்றன. இதனால், கட்டணத்தை செலுத்த பெற்றோா் அவதிப்படுகின்றனா்.

எனவே, வரும் ஆண்டு முதல் முன்கூட்டியே அரசு சாா்பில் கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோரிடம் கட்டணத்தை செலுத்துமாறு தனியாா் கல்லூரிகள் வலியுறுத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடப்படும் என்றாா் அவா்.

விழாவில் சுகாதாரத் துறை செயலா் உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ரமேஷ், மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT