புதுச்சேரி

மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமியை அடக்கம் செய்த இடத்தில் பொதுமக்கள் மலரஞ்சலி

2nd Dec 2022 03:20 AM

ADVERTISEMENT

மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

புதுச்சேரியில் மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி திடீரென புதன்கிழமை உயிரிழந்தது. கோயில் முன் வைக்கப்பட்ட யானையின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா். இறுதி ஊா்வலத்திலும் ஏராளமானோா் பங்கேற்றனா். ஜேவிஎஸ் நகா் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள கோயில் நிலத்தில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் கற்சிலை வைக்கப்படும் என்று அமைச்சா் லட்சுமிநாராயணன் கூறியுள்ளாா்.

இந்தநிலையில், யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். யானைப் பாகன் சக்திவேல் பால் ஊற்றி பூஜை செய்தாா்.

வனத்துறை அதிகாரி தகவல்: யானை நல்லடக்கத்துக்கு முன் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதுகுறித்து, வனத்துறை காப்பாளா் வஞ்சுள வள்ளி கூறியதாவது: யானையின் இதயம், ஈரல், நுரையீரல், தும்பிக்கை ஆகிய பாகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் வந்துவிடும். ஆனாலும், மாரடைப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்.

ADVERTISEMENT

பொதுவாக பெண் யானைகளுக்குத் தந்தம் வெளியே தெரியாது. ஆனால், கோயில் யானை லட்சுமிக்கு தந்தம் வெளியே தெரிந்திருப்பது சிறப்பம்சம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT