புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி மதுப் புட்டிகள் பறிமுதல்

1st Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான 7,344 போலி மதுப் புட்டிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுவை மாநிலப் பகுதிகளில் மதுபானங்களை போலியாக தயாரித்து, தமிழகப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக புதுச்சேரி கலால் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், கலால் துறை துணை ஆணையா் சுதாகா் ஆலோசனையின் பேரில், வட்டாட்சியா் சிலம்பரசன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

புதுச்சேரி சேதராப்பட்டு கரசூா் பிடாரியம்மன் கோயில் அருகே தனிப் படையினா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனா். அதில், தவிடு மூட்டைகள் அடுக்கப்பட்டு, அவற்றின் நடுவே அட்டைப் பெட்டிகளில் போலியாக தயாரிக்கப்பட்ட தமிழக வகை மதுப்புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

153 பெட்டிகளில் இருந்த 7,344 (தலா 180 மி.லி.) மதுப் பாட்டில்களை கலால் துறையினா் கைப்பற்றினா். அவற்றின் மதிப்பு ரூ.11.28 லட்சம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து கலால்துறை விதிகளின்படி வழக்குப் பதிவு செய்து வாகன உரிமையாளா், இதில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT