தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுவை புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வரக்குரைஞா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.
புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் அவசரச் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.குமரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.கதிா்வேல் முன்னிலை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் பக்தவச்சலம், ரங்கநாதன், மோகன்தாஸ், கண்ணன் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள, புதுவை டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியின் பொன்விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும், மூத்த வழக்குரைஞா்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, அரசு அந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் சங்கத் தலைவா் எம்.குமரன் தலைமையில், புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.