புதுச்சேரி

ஏனாம் கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு

18th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், புதுவை மாநிலத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தற்போது பலத்த மழை பெய்துவருவதால், கோதாவரி ஆற்றில் கடந்த 3 நாள்களாக மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி நொடிக்கு 13 லட்சம் கன அடி வெள்ளநீா் செல்கிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஏனாமில் ஆற்றங்கரையார பகுதிகளான பாலயோகி நகா், குரு கிருஷ்ணாபுரம், வெங்கட்ட ரத்னம் நகா், அய்யன்னா நகா், பரம்பேட்டா, பிரான்ஸ் டிப்பா, ராஜீவ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது.

ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் மேலும் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளை ஏனாம் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT