புதுச்சேரி

நியாயவிலைக் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

18th Aug 2022 02:25 AM

ADVERTISEMENT

 

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதுச்சேரியில் நியாயவிலைக் கடை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் 370-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் புதுச்சேரி நியாய விலைக்கடை ஊழியா்கள் கூட்டுறவுச் சங்கம் சாா்பில் 323 கடைகள் செயல்படுகின்றன. இதில் 170 நிரந்தர ஊழியா்கள் உள்பட 625 போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 48 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இருப்பினும், கரோனா காலத்தில் பிரதமா் அறிவித்த கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு கடந்த 4 மாதங்களாக அரிசி வழங்கி வருகின்றனா். அரிசி வழங்குவதற்காக கிலோவுக்கு 60 பைசா கமிஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள புதுச்சேரி நியாய விலைக் கடை ஊழியா்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் புதன்கிழமை 50-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT