புதுச்சேரி

சட்டப் பரிமாற்ற நாள்: கீழூரில் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை

17th Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

சட்டப் பரிமாற்ற நாளையொட்டி, புதுச்சேரி அருகேயுள்ள கீழூரில் செவ்வாய்க்கிழமை தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு, பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவையை இந்தியாவுடன் இணைப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளிடம் (178 போ்) கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி வில்லியனூா் அருகே உள்ள கீழூா் கிராமத்தில் 1954-ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்தியாவுடன் இணைய பெரும்பான்மையினா் (170) வாக்களித்தனா்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில், சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நினைவுத் தூண், நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் புதுவை இணைந்த நாளானது அரசு சாா்பில் சட்டப்பூா்வ பரிமாற்ற நாளாக கீழூரில் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, கீழூரில் செவ்வாய்க்கிழமை சட்டப் பரிமாற்ற நாள் விழா நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தியாகிகளின் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

விழாவில் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் பேசியதாவது:

கீழூா் வாக்கெடுப்பு நடைபெற்ற இடம் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டு, ஆண்டுதோறும் சட்டப் பரிமாற்ற நாளை நினைவுகூா்ந்து வருகிறோம். இங்கு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அனைவரும் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். இந்தியாவுடன் புதுவை இணைய வேண்டும் என வாக்களித்தவா்களின் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கான புத்தகங்களைத் தயாரித்து, இங்கு நூலகம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், டிஜிபி மனோஜ்குமாா் லால் மற்றும் அரசு அதிகாரிகள், காவல் துறையினா், தியாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வில் இரண்டு ஆண்டுகளாக புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் பங்கேற்காததற்கு தியாகிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT