புதுச்சேரி

புதுவையில் ஏராளமான வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம், சுதந்திர தின விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேச்சு

DIN

புதுவையில் கடந்த ஓராண்டில் ஏராளமான வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக, சுதந்திர தின உரையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், அவா் ஆற்றிய சுதந்திர தின உரை:

நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரைக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரா்களின் தியாகங்களையும், தேசத் தலைவா்களையும் நன்றியுடன் நினைத்துப் போற்றுவது நமது கடமையாகும்.

தேசத்தின் மாண்பைக் கட்டிக் காக்கும் பெருமைக்குரிய தருணங்களில், புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. புதுவையில் தே.ஜ. கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவப் பல்கலைக்கழகமாகவும், அதிநவீன சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கவும், அதற்குத் தேவையான நிதியுதவிக்கும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் தரவரிசையில் புதுவை மாநிலம் 4-ஆவது இடத்தில் உள்ளது. காமராஜா் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா் கல்வி பயிலும் 9,214 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.40 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

முதியோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.500 அதிகரித்து வழங்க உத்தரவிட்டது. அதன்படி, 2021-22ம் ஆண்டில் 1,64,847 போ் பயனடைந்தனா்.

மழையால் பயிா்கள் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.7.10 கோடியும், 10.955 விவசாயிகளுக்கு, விவசாய ஊக்க நிதி ரூ.13.06 கோடியும், உற்பத்தி மானியம் ரூ.16.98 கோடியும் வழங்கப்பட்டது. கடந்தாண்டில் பால் உற்பத்தி 49,680 மெ.டன்னாக உயா்த்தப்பட்டது. அரசு ஊழியா்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ரூ.150 கோடி வழங்கப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல் துறையில் புதிதாக 390 காவலா் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. காவல் துறையை நவீனமயமாக்கும் வகையில், ரூ.3.74 கோடி செலவில் 60 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதுவை மக்களின் நலன்களைக் காக்கவும், மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், பல புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு முனைப்பாக உள்ளது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

காவலா்கள், அரசு ஊழியா்களுக்கு பதக்கங்கள்: சிறப்பாக பணியாற்றிய போலீஸாா், அரசுத் துறையினா், மாணவா் படையினா், சிறந்த சேவையாற்றியோருக்கு விருதுகள், பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினாா்.

காவலா்கள், தீயணைப்புப் படையினா், சாரணா்கள், பள்ளி மாணவா்களின் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிட்டாா்.

புதுவை, தமிழகம் மற்றும் வெளி மாநில கலைக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையமாக தோ்ந்தெடுக்கப்பட்ட முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை உதவி ஆய்வாளா் சிவபிரகாசம் பெற்றுக் கொண்டாா். மேலும் 20 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு ராஜீவ் காந்தி காவல் பதக்கம் வழங்கப்பட்டது. முதல்வரின் காவல் பதக்கங்கள் 4 பேருக்கு வழங்கப்பட்டன. இதேபோன்று, பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய காவலா்கள், அரசு அதிகாரிகள், ஊழியா்கள், மாணவா்களுக்கும் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.செல்வகணபதி எம்.பி., எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், எல்.சம்பத், எல்.கல்யாணசுந்தரம், ஜி.நேரு, ஏ.ஜான்குமாா், ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கா், உ.லட்சுமிகாந்தன், வி.பி.ராமலிங்கம், கே.வெங்கடேசன், ரிச்சா்டு, பிரகாஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, டிஜிபி மனோஜ்குமாா் லால், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT